இயற்கை நாப்கின் பெண்களை பாதுகாக்கும்! உறுதியாக சொல்கிறார் உமா மகேஸ்வரி

இயற்கை மூலிகை பொருட்களாலான சானிடரி நாப்கின்களை தயாரித்து வருகிறார், எல்.உமா மகேஸ்வரி, 36. அவரிடம் பேசியதிலிருந்து...
இயற்கை மூலிகை நாப்கின்கள் தயாரிக்கும் எண்ணம் எப்படி?
சென்னை, பெரம்பூர் தான், என் சொந்த ஊர். 10ம் வகுப்பு வரை படித்து, தொடர்ந்து படிக்க வசதியின்றி, ராயபுரத்தில் உள்ள, தனியார் பல்பொருள் அங்காடியில், விற்பனை மேற்பார்வை பிரதிநிதியாக பணிபுரிந்தேன். அப்போது, மாதவிடாய் காலங்களில், சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தியதால், பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டேன்.தொடர்ந்து, உடல்நிலை சரியாகாததால், பணியை துறந்து, வீட்டில் இருந்தேன்.


அந்த சமயம், அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்தில் நடந்த, புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்றேன். அதில், 28 வயது பெண் ஒருவர், சானிடரி நாப்கின் பயன்பாடால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கர்ப்பப் பையை இழந்து, தன் சந்ததியே அழிந்துவிட்டதாக, வேதனையுடன் கூறினார்.

இதுபோல், நாடு முழுவதும், மாதவிடாய் காலங்களில், சானிடரி நாப்கின்களை பயன்படுத்தும் பெண்களில், 65 முதல், 70 சதவீதம் பேர், பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக, புற்றுநோய் மைய டாக்டர்கள் தெரிவித்தனர்.இதற்கு தீர்வு காணவே, இயற்கை மூலிகை பொருட்ளாலான, சானிடரி நாப்கின்களை தயாரிக்க தொடங்கினேன்.
புழக்கத்தில் உள்ள சானிடரி நாப்கின்களால் ஏற்படும் பாதிப்புகள்?

பிளாஸ்டிக், வாசனை திரவியங்கள் மற்றும் மரக்கூழ்கள் கொண்டு, தற்போதைய சானிடரி நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன.இதில், மரக்கூழை வெள்ளையாக்க, 'குளோரைடு' பயன்படுத்தப்படுகிறது. குளோரைடு வாயிலாக, ஒரு முறைக்கு இருமுறை, பேட்கள், 'பிளீச்' செய்யப்பட்டு, அதில், 'ஜெல் பார்ம்' போடப்படுகிறது.அதிக நேரம் தாக்கு பிடிக்க, 'சோடியம் போலி அக்ரிலேட்' எனும், வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், அவற்றை பயன்படுத்தும்போது, 'டயாக்சின்' எனும் வேதிப்பொருள் வெளிப்படுகிறது. இது, புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது.